தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கான தேவை காலாவதி ஆகி கால் நூற்றாண்டுகள் ஆகிறது. இது கற்பனை அல்ல. எனது ஏழு வருட ஆய்வுகளின் பலனாக உங்களுக்கு இதை வழங்குகிறேன்.
பல வருடங்களாக எழுத்தாளர்களின் தேவையை பற்றி பலர் பேசி வருகின்றனர். மற்ற மொழி திரைப்படங்கள் ஜெயிப்பதற்கு எழுத்தாளர்களும் ஒரு காரணம் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் தமிழ் திரையுலகில் மட்டும் எழுத்தாளர்கள் என்னும் தனி துறை இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் இருந்தால் அதிக திரைப்படங்கள் வெற்றி பெரும் என்று சொல்கிறார்கள்.
முதலில் எழுத்தாளர்கள் என்றால் யார் என்று பார்க்க வேண்டும்?
·
கதை எழுதுபவர்களா?
·
திரைக்கதை எழுதுபவர்களா?
· வசனம் எழுதுபவர்களா?
எல்லோரையும் நாம் “எழுத்தாளர்கள்” என்பதால் யாரை எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கிறோம் என்கிற தெளிவு வேண்டும்.
பொத்தாம் பொதுவாக எழுத்தாளர்களின் தேவை தமிழ் திரையுலகில் இருக்கிறது என்கிறோம். கதை எழுத்தாளரா? திரைக்கதை எழுத்தாளரா? அல்லது வசன எழுத்தாளர்களா என்கிற தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அதனால் தான் எந்த எழுத்தாளரும் இந்த துறைக்குள் வருவதில்லை.
எழுத்து என்றால் எல்லாம் ஒன்று தானே! அதனால் எழுத்தாளர் என்றால் எல்லாம் எழுத வேண்டும் அல்லவா என்று நீங்கள் கேட்டால் அது உங்களின் அறியாமையை தான் காட்டுகிறது.
சிலர் எழுத்தாளர் தேவை என்று விளம்பரம் தரும் பொழுது எந்த மாதிரியான எழுத்தாளர் தேவை என்பதை குறிப்பிடுவதில்லை. அதனால் திறன் உள்ள எழுத்தாளர்கள் அதற்கு செவி சாய்க்க மாட்டார்கள். வறுமையில் இருப்பவர்கள், எந்த வேளையாவது செய்து வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள் தான் அதற்கு விண்ணப்பிப்பார்கள்.
கதை மட்டுமே எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், கதையின் தொடக்கம், நடுவண், மற்றும் முடிவை எழுதியிருப்பார்கள். கதாபாத்திரங்கள், களம், மற்றும் சில சம்பவங்கள் மட்டுமே இருக்கும். அதில் எழுத்து நடை, பார்வை, வேறொரு கோணத்தில் நோக்குதல் இருக்காது. கதை பஞ்சம் இயக்குநர்களுக்கோ அல்லது தயாரிப்பளர்களுக்கோ இருந்தால் கதை எழுத்தாளரை நாடலாம். சிறுகதை, தொடர்கதை, நாவல், போன்ற வடிவங்களில் கதை இருக்கும் பொழுது அதில் உள்ள கருத்து, முரண் மீது ஆர்வம் கொள்ளும் படைப்பாளிகள் அந்த எழுத்தாளரை தொடர்பு கொண்டு திரைப்படமாக அந்த கதையை மாற்ற உரிமை கேட்பார்கள். அவ்வளவு தான் கதை எழுத்தாளருக்கும், படைப்பாளிகளுக்கும் உள்ள தொடர்பு. சில நேரங்களில் திரையில் எழுத்தாளர்களின் பெயரைக்கூட குறிப்பிடுவதில்லை. சில இயக்குனர்கள் எழுத்தாளர்களிடம் இருந்து உரிமை பெற்று கதையை அவர்களின் போக்கிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைப்பதும் உண்டு.
உரிமை பெறப்பட்ட கதை என்பது பட்டை தீட்டப்படாத வைரம் போன்றது. காகிதத்தில் படிக்கும்பொழுது சுவாரஸ்யமாக இருக்கும். அதை திரை வடிவமாக செய்ய இயலாது. அதனால் திரைக்கதை எழுத்தாளர் அந்த கதையின் நோக்கம், முரண் கெட்டுவிடாமல் சுவாரஸ்யமான பல சம்பவங்களை கொண்டு வேறொரு கண்ணோட்டத்தில், நடையில் அந்த கதையை திரைக்கதையாக மாற்றுவார்கள். சம்பவங்களை முன்னுக்கு பின்னாக அடுக்கி வைத்தும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். திரைக்கதை எழுதுவது என்பது தனி திறமை, கலை. எல்லோராலும் இதை செய்ய இயலாது.
கதை எழுதுபவரே திரைக்கதையும் எழுதலாம். ஆனால் அதற்கான பயிற்சியும் கல்வியும் அவசியம் தேவை. அதுபோல் கதை, திரைக்கதை எழுதுபவரே வசனமும் எழுதமுடியும். அல்லது மூன்றையுமே மூன்று தனி நபர்களைக்கொண்டு எழுத வைக்க முடியும். சம்பவம், கதாபாத்திர தன்மை, சூழ்நிலை கருத்தில் கொண்டு வசனம் எழுத வேண்டும். மூன்றிற்கும் வேறு விதமான உழைப்பு, படைப்பு திறன் தேவை. அதனால் எழுத்தாளர் வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகள் முதலில் என்ன மாதிரியான எழுத்தாளர் தேவை என்பதை உறுதி செய்திட வேண்டும்.
இப்பொழுது இயக்குனருக்கு
ஏன் எழுத்தளார்கள் தேவைப்படுகிறார்கள், எதற்காக தேவைப்படுகிறார்கள் என்று பார்ப்போம்.
திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று திரைத்துறைக்குள் வரும்பொழுதே ஏதோ ஒரு கதையுடன் (கதைகளுடன்) தான் படைப்பாளிகள் வருகிறார்கள். அதனால் அவர்கள் "கதை எழுத்தாளர்களை" தேடுவதில்லை. அவர்களிடமே பல கதை கருக்கள், சம்பவங்கள், முரண்கள் இருக்கும். அவர்கள் வாழ்வில் நடந்தது, நண்பனுக்கு நடந்தது, ஊரில் நடந்தது, சமுதாயத்தில் நடந்தது என்று பெரிய பட்டியல் இருக்கும். அவர்கள் தடுமாறுவது திரைக்கதை மற்றும் வசனத்தில் தான். அதனால் திரைக்கதை எழுத்தாளர்களை தான் இவர்கள் தேடுகிறார்கள். இவர்களின் மொழியில் எழுத்தாளர் என்பது திரைக்கதை, வசனம் எழுதுபவர் மட்டும் தான்.
எப்படிப்பட்ட எழுத்தளார்களை இவர்கள் தேடுகிறார்கள்?
இவர்களின் கதையில் உள்ள குறைகளை பெரிதாக எடுத்துரைக்காமல், திரைக்கதையில் தடுமாறும் இடங்களில் மட்டும் ஆலோசனை சொல்லும் நபர்களை மட்டுமே இவர்கள் தேடுகிறார்கள். இலக்கிய வட்டத்தில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு திரைக்கதையின் சூட்சமம் தெரியாது. அவர்களுக்கு திரைக்கதை இலக்கணம் தெரியாது. அதனால் படைப்பாளிகள் இலக்கிய பின்புலம் உள்ள எழுத்தாளர்களுடன் வேலை பார்க்கும் பொழுது விரைவாக அயர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் அந்த எழுத்தாளர்கள் கலை நயமான காட்சிகளை மட்டுமே அடுக்குகிறார். திரை மொழி அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் ஓரிரு சந்திப்பிற்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு நடக்கிறது.
திரைப்படத்தின் இலக்கணம் தெரிந்த நபர்களுடன் வேலை பார்ப்பதில் படைப்பாளிகளுக்கு சிக்கல் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பணம் மற்றும் திரையில் பெயர் (ஸ்க்ரீன் கிரடிட் – Screen Credit and Money) வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பணமு, அங்கீகாரமும் தர இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தயக்கம் இருக்கிறது.
திரைக்கதையில் அந்த எழுத்தாளர் முழுவதுமாக வேலை பார்த்திருந்தாலும் இயக்குனர் ஓரிரு கருத்துக்களை மட்டுமே கூறி, சில மாற்றங்களை மட்டுமே சொல்லி இணை திரைக்கதை ஆசிரியராக அவரின் பெயரையும் போட்டுக்கொள்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
திறன் மிக்க எழுத்தாளர்கள் இந்த இணை, துணை என்கிற வார்த்தைகளில் விருப்பம் இல்லாமல் இருப்பது. பெரும்பாலான வேலையை எழுத்தாளர் செய்துவிட்டு இணை எழுத்தாளர் என்று போட்டுக்கொள்வது ஏற்புடையது அல்ல என்பது அவர்களின் கருத்து. இதனால் திறன் மிக்க எழுத்தாளர்கள் புதுமுக இயக்குனர்களுடன் பயணிக்க விரும்புவதில்லை. வெறும் ஆலோசனை சொல்ல மட்டுமே எழுத்தாளரை இன்றைய படைப்பாளிகள் தேடுகிறார்கள். அந்த ஆலோசனைக்கு பெரிய சன்மானமும் அங்கீகாரமும் கிடைக்காது என்பதால் பல திறமையான எழுத்தாளர்கள் வாய்ப்பை நிராகரித்து விடுகிறார்கள்.
ஒரு திரைக்கதைக்குள் கதை மறைமுகமாக இருக்கிறது. வசனமும் அதற்குள் தான் இருக்கிறது. இருந்தும் இயக்குனர்கள் எல்லோரும் பெருமையுடன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெரிதாக போட்டுக்கொள்ள விரும்புவார்கள்.
கதை என்பது வேறு, திரைக்கதை என்பது வேறு என்கிற அடிப்படை விஷயங்கள் பல இயக்குனர்களுக்கு தெரிவதில்லை. கதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம், அதற்கு வேறொருவர் திரைக்கதை எழுதலாம் என்று இயக்குனர்களுக்கு தெரிவதில்லை. எல்லாமே ஒருவரே செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அது தவறில்லை ஆனால் பலரால் இது முடியாது.
கதை, திரைக்கதை என்பது எழுத்து வேலை. உள்முக நபரின் (Introvert) வேலை. ஒரு தனி அறையில் தன்னை தனிமை படுத்திகொண்டு கற்பனையின் துணையுடன் எழுதுவது. அதற்கும் இயக்குதலுக்கும் தொடர்பில்லை. இரண்டும் இரு வேறு திறன். ஆயிரத்தில் ஒருவரால் அல்லது லட்சத்தில் ஒருவரால் செய்ய முடிகிற ஒரு திறன். எல்லோருக்கும் இது சாத்தியம் இல்லை. ஆனால் பிடிவாதமாக அனைத்தையும் நானே செய்வேன் என்கிற பிடிவாதம் முதல் காரணம்.
இரண்டாவது முக்கிய காரணம் திரைக்கதையில் இயக்குனரின் பெயரை போட்டுக்கொள்வதால் அந்த திரைப்படத்திற்கு நடக்கும் வணிகத்தில் அவர் பங்கு போட்டுக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்று வேறு மொழி உரிமம், சாட்டிலைட், OTT போன்றவற்றில் வரும் பணத்தை பங்கு போட்டுக்கொள்ளலாம்.
கதை ஒருவருடையது, திரைக்கதை இன்னொருவருடையது என்றால் அந்த உரிமைத் தொகை எப்படி பங்கு பிரித்து தரப்படும் என்பதில் இன்னும் தெளிவில்லை. இயக்குதலை மட்டுமே ஒருவர் செய்துவிட்டு அதற்கான சம்பளமும் பெற்று பிறகு திரைக்கதையில் பங்கும் பெறுவது என்பது எழுத்தாளர்களுக்கு பிடிப்பதில்லை.
தயாரிப்பாளரின் பார்வையில் எழுத்தாளர்!
தயாரிப்பாளரிடம் இயக்குனர் கதை சொல்கிறார் ஆனால் திரைக்கதை தயாரிக்க மட்டும் இன்னொருவர் பங்குபெறுவார் என்பது தயாரிப்பாளருக்கு கூடுதல் பண சுமை என்று கருதுகிறார். இயக்குனரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிட வேண்டும் என்பது பல தயாரிப்பாளரின் எண்ணம். எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் சம்பளம் பேசப்படுகிறது. இதில் கூடுதலாக எழுத்தாளருக்கு ஒரு சம்பளம் என்பது தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. இயக்குனருக்கு முதல் திரைப்படமாக இருந்தால் சம்பளம் இருக்காது அல்லது குறைவான சம்பளம் இருக்கும். இதனால் எழுத்தாளர்களுக்கு எப்படி பணம் தர முடியும்?
தயாரிப்பாளரை கவருவதற்கு இயக்குனரிடம் முழு திரைக்கதை வேண்டும். ஆனால் அவருக்கு திரைக்கதை எழுத தெரியவில்லை அல்லது தடை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் எழுத்தாளரின் திறனை அவர்கள் எப்படி வாங்குகிறார்கள்? பல நேரங்களில் அங்கீகாரம் தருவதாக சொல்கிறார்கள். அல்லது தயாரிப்பாளர் விரும்பினால் திரையில் பெயர், பணம் கிடைக்கும் என்கிறார்கள். இயக்குனருக்கான தடையை நீக்கி திறமையான ஒரு திரைக்கதையையும் செய்துவிட்டு பணம், அங்கீகாரம் இல்லை என்றால் எப்படி? என்று எழுத்தாளர்கள் சிந்திக்கிறார்கள்.
வாய் சொல்லில் வீரராக இருக்கும் சில புதுமுக இயக்குனர்கள் "நான் வாழ்ந்தால் நீங்களும் வளரலாம். இத்தனை வருடம் நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே!" என்று ஆசை வார்த்தைகள் சொல்லி திரைக்கதை எழுத அழைப்பார்கள்.
Spec Writers - இலக்கில்லாமல் ஒன்று கூடி எழுதுபவர்கள்.
இவ்வகை எழுத்தாளர்கள் புது முக இயக்குனர்களுடன் சேர்ந்து ஒரு கதை கருவை பற்றி பேசி, முரணை இணைத்து ஒரு திரைக்கதை தயாரிப்பார்கள். பிறகு தான் தயாரிப்பாளர்களை அணுகுவார்கள். பல நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி பிறகு இந்த திரைக்கதை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே அதை கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு திரைக்கதையை தயாரிக்க தொடங்குவார்கள். இதனால் ஏற்கனவே திரைக்கதை தயாரித்த காலம் வீணாகியிருக்கும்.
உதாரணமாக இருவர் சேர்ந்து ஒரு லவ் ஸ்டோரியை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தற்சமயம் திரையரங்கில் வெற்றி பெரும் திரைப்படங்கள் ஹாரர் (Horror) வகை என்றால் அனைத்து தயாரிப்பாளர்களும் ஹாரர் கதையை விரும்புவார்கள். இதனால் ஒரு ஹாரர் கதையை இவர்கள் உருவாக்குவதற்கும் சந்தை நகைச்சுவைக்கு தவிவிடும். இதனாலேயே இவ்வகை எழுத்தாளர்கள் சோர்வடைந்துவிடுவார்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சில காலங்களில் பிரிந்துவிடுவார்கள்.
இதற்கு தீர்வென்று ஒன்று இல்லாமல் போவதால் தொடர்ந்து எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் வருவதில்லை. இயக்குனரும் தயாரிப்பாளரும் எழுத்தாளரை ஒரு ஆலோசகராகவே பார்க்கிறார்கள். அந்த ஆலோசனையின் வலிமை தெரியாமல் சொற்ப பணத்திற்கு விலை பேசுகிறார்கள்.
ஐடியா என்பது காற்றை போன்றது
சில எழுத்தாளர்களை ஸ்டோரி டிஸ்கஷன் (கதை விவாதம்) என்று இயக்குனர்கள் அழைப்பார்கள். சில நாட்கள் கதையை விவாதம் செய்துவிட்டு சரிவரவில்லை என்று சொல்வார்கள். அல்லது தயாரிப்பாளர் பணம் தரவில்லை என்பார்கள். அல்லது தயாரிப்பாளர் ப்ரொஜெக்டை கிடப்பில் போட்டுவிட்டார் என்பார்கள். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கதை விவாதத்தில் பல ஐடியாக்களை பேசியிருப்போம். வாய்ப்பு வருகிறது என்று எழுத்தாளர் பல நல்ல கற்பனைகளை கட்டவிழித்து இருப்பார். பிராஜெக்ட் நடக்கவில்லை என்றால் அந்த ஐடியாவை திரும்ப பெற முடியாது. காற்றில் போன ஐடியாக்களை திரும்ப பெற முடியாது. அதை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்று சொல்ல முடியாது. அவர்கள் பயன்படுத்தினாலும் அது உங்களுடையது என்பதற்கான சான்று இல்லை. இதனால் முன் பணம் இல்லாமல் பல எழுத்தாளர்கள் கதை விவாதங்களில் பங்குகொள்ள விறும்புவதில்லை. வறுமையில் இருக்கும் சில உதவி, இணை இயக்குனர்கள் மட்டும் இதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நடந்தாலும், நடக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.
இது போன்ற கதை விவாதங்களில் பங்கு பெரும் பல உதவி மற்றும் இணை இயக்குனர்கள் நமது ஐடியாக்களை வேறொரு இடத்தில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. அப்படியே கதை விவாதங்கள் வெற்றி பெற்று திரையாக்கம் செய்ய தயாரானாலும் எழுத்தாளருக்கு சொற்ப பணமே கிடைக்கும். திக்கி, திசை தெரியாமல் இருந்த திரைக்கதைக்கு உயிர் கொடுத்த நபருக்கு சில நூறு, ஆயிரம் மட்டுமே கிடைக்கும் நிலை இருக்கிறது.
கடந்த காலங்களில் எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருந்தார்கள்?
கதை இலாக்கா என்று இருந்தது. அதன் வேலை திரைக்கதை செய்யக்கூடிய வகையில் இருக்கும் கதையை தேர்ந்தெடுப்பது தான். அதை திரைக்கதை ஆசிரியர் திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைப்பார். பிறகு வசனம் எழுத வேறொருவர் இருந்தார். இவர்களுக்கு ஸ்டுடியோவில் மாத சம்பளம் தரப்பட்டது. சில நேரங்களில் படத்திற்கு படம் சம்பளம் தரப்பட்டது. இது எழுபதுகளின் (1970’s) தொடக்கம் வரை மட்டுமே!
சில தயாரிப்பாளர்கள் திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் பொழுது கூட வெளியில் இருந்து ஸ்க்ரிப்ட் டாக்டர் (Script Doctor) வரவழைத்து கதையை மெருகேற்றி, சுவாரஸ்யப்படுத்தி, இலக்கில்லாமல் இருக்கும் திரைக்கதையை நேர்த்தி ஆகியிருக்கிறார்கள். இவர்களுக்கும் பெரிய சம்பளம் கிடையாது.
பிறகு எழுத்தாளர்களே இயக்குனர்கள், இயக்குனர்களே எழுத்தாளர்கள் (Auteur Director) என்னும் முறை வந்தது. தயாரிப்பாளர்களிடம் முழு திரைக்கதை தரப்பட்டு பிறகு திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கு சென்றது.
கே. பாலசந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா போன்றவர்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட கதை இலாக்காவை வைத்துக்கொண்டு சுதந்திரமாக கதையை அமைத்தனர். பிறகு, கே. பாக்யராஜ், விசு, டி.ராஜேந்தர் போன்றோர் அனைத்து வேலைகளையும் செய்தனர். இதனால் எழுத்தர்களாக இருந்தவர்கள் ஸ்டுடியோவின், தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டவர்கள் இயக்குனர்களின் கீழ் செயல்பட நேர்ந்தது. ஸ்டுடியோ, தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கதை இலாகாவில் பணியாற்றும்பொழுது மாத சம்பளம் அல்லது படத்திற்கு சம்பளம் என்று இருந்த நிலை மாறி இயக்குனர்களின் கீழ் வேலை பார்க்கும்பொழுது தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் மட்டுமே சம்பளம், அல்லது சொற்ப பணம் என்று நிலை மாறிவிட்டது. இங்கே தான் எழுத்தாளர்கள் திரைத்துறையை விட்டு வெகு தொலைவில் சென்றனர்.
வறுமையின் காரணமாக சில தருமிகள் மட்டும் எழுத்தர்களாக செயல்பட்டனர். பிறகு எழுத்தாளர்களின் அந்த வேலையை உதவி இயக்குனர்கள் செய்யவேண்டிய சூழ்நிலை வந்ததும் இன்னும் நிலைமை மோசமானது. ஒவ்வொரு உதவி இயக்குனரும், இணை இயக்குனரும் சில காட்சிகளை சொல்லி திரைக்கதையை உருவாக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதனால் பலரின் கருத்துக்களை ஒரே திரைக்கதைக்குள் அழுத்த நேர்ந்தது.
இன்றைய சூழ்நிலையில் உதவி இயக்குனருக்கான விளம்பரத்தில், விண்ணப்பிப்பவர் "புத்தகம் வாசிக்கும் திறனோடு இருக்க வேண்டும், தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும், ஸ்க்ரிப்ட் அறிவு இருக்க வேண்டும், போட்டோஷாப் போன்ற திறன்கள் இருக்க வேண்டும்" என்று பட்டியலிடுகிறார்கள். அதனால் எழுத்திலும் கவனம் செலுத்த முடியாமல், இயக்குதலிலும் கவனம் செலுத்த முடியாமல், எது சரியான திரைப்படம், எது சரியான திரைக்கதை என்கிற குழப்பத்தில் இன்றைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் தான் திரைத்துறையின் எதிர்காலம்.
திரையுலகில் எழுத்தாளர்களாக இருந்தவர்கள் (திரைக்கதை அல்லது வசனம்) எழுதிய நபர்கள் எல்லா இயக்குனர்களுக்கும் அவர்கள் எழுதவில்லை. உதாரணமாக சுஜாதா, பாலகுமாரன் போன்றோர் ஒரு சிலருக்கு மட்டுமே எழுதினார்கள். அதுவும் கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தும் இல்லை. அதனால் இந்த துறை எழுத்தாளர்கள் என்பவர்கள் இது மட்டும் தான் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்து விட்டனர். புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் இந்த எழுத்தாளர்கள் தன்னுடைய சம்பளத்தை வாங்க தயாரிப்பாளர்களிடம் எப்படி போராடினார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே அவர்கள் குறிப்பிட்ட பெரிய நடிகர்களுக்கு, அல்லது இயக்குனர்களுக்கு மட்டுமே எழுதினார். எழுத்தாளர்களுக்கு தெரியாதா முன்பின் தெரியாத படைப்பாளிகள் அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று.
எழுத்தாளர் சுபா, ரா கி ரங்கராஜன் போன்ற எழுத்தாளர்கள் இணை திரைக்கதை ஆசிரியர்களாகவே பயன்படுத்தப்பட்டனர். கிரேசி மோகன் வசனகர்த்தாவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். ஹாய் மதன் இணை வசனகர்த்தாவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். எங்கேயெல்லாம் எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்கிறார்களோ அங்கேயெல்லாம் இயக்குனர் அவரது பெயரையும் சேர்த்துக்கொள்கிறார். இது தற்பொழுது இருக்கும் எழுத்தாளர்களுக்கு சொல்லும் சேதி என்ன? புதிதாக திரையுலகில் வந்து எழுத்துப்பணியை செய்ய நினைக்கும் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக என்ன இருக்கிறது?
வெறும் எழுத்தாளர்களாகவே இருந்தால் மதிப்பு இல்லை என்பதால் எழுத்தாளர்கள் இயக்குநராக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். வெறும் இயக்குனராக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதால் எழுதவே வராதவர்கள் எழுத முயற்சிக்கிறார்கள் அல்லது எழுத்தாளர்களுடன் உடன்படிக்கை போட்டுக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் எழுத்தாளர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
தமிழ் திரைக்கதை எழுத்தாளர்கள் என்று நீங்கள் கூகுள் செய்து
பாருங்கள். திரைப்பட இயக்குனர்களின் பெயர் மட்டும் தான் அதில் வரும். இந்த அளவிற்கு
தான் ஸ்டூடியோ காலத்தில் இருந்து இன்று வரை நாம் எழுத்தாளர்களுக்கு மதிப்பு கொடுத்து
வைத்திருக்கிறோம்.
படைப்பாளிகள் என்னை அணுகும்பொழுது நான் கேட்க்கும் முதல் கேள்வி "எந்த வகையான எழுத்தாளரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" இதற்கு பதில் இருக்காது. ஏனென்றால் எழுத்தாளர்களில் இவ்வளவு வகை, இவ்வளவு வேலை இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை.
அடுத்த கேள்வி "எனா வேலை, என்ன சம்பளம்?" அதற்கும் பதில் இருக்காது. ஏனென்றால் அவர்களிடம் தயாரிப்பாளர் இல்லை. அதனால் யார் இந்த சம்பளத்தை ஏற்றுக்கொள்வது என்கிற கேள்வி. இலவசமாகவோ, குறைவான சம்பளத்திற்கு நான் வேலை பார்ப்பதில்லை என்று அவர்களுக்கு தெரியும். தயாரிப்பாளர் என்னை நேரடியாக அழைத்து திரைக்கதை வேலை தந்தாலும் சரியான சம்பளம் பேசுவதில்லை. அதனாலேயே இங்கே பெரிய இடைவெளி இருக்கிறது.
என்னை நன்றாக அறிந்த எனது திரைத்துறை நண்பர்களும் எனக்கு வேலை தருவதில்லை. இந்த சூழ்நிலையில் தான் இன்றைய திரைத்துறை மேலும் மேலும் பலகீனமான திரைக்கதையை வைத்துக்கொண்டு சில வெற்றியை தருகிறது.
யானையை வாங்க செலவு செய்யும் இந்த துறை அங்குசம் வாங்க செலவு செய்வதில்லை.
எழுத்தாளர் என்று ஒருவர் நம் திரைத்துறைக்கு தேவையே இல்லை. சொற்ப பணத்திற்கு வேலை செய்யும் ஒரு ஊழியன் தான் இங்கு தேவைப்படுகிறது. பிரம்மாவாக இருந்தாலுமே தினக்கூலிக்கு இங்கே வேலை செய்யவேண்டியதாகிறது.
அதனால் யாரும் இனி எழுத்தாளர்களை நம் துறை சரியாக பயன்படுத்தவில்லை என்று சொல்லாதீர்கள். இங்கே எழுத்தாளர்களின் பஞ்சம் இல்லை. எழுத்தாளர்களை கவுரவிக்கும் மாண்பு இல்லை என்று சொல்லுங்கள்.
பின்குறிப்பு: இந்த ஆய்வறிக்கைக்கு AI பயன்படுத்தி எழுதியதில்லை. முழுக்க முழுக்க எனது அனுபவம் சார்ந்து எழுதியது.
இந்த காலத்தில் இதையும் சொல்லவேண்டியதாகிறது.