மாலை நேரம். சென்னை மாநகரத்தின் பல அலுவலகங்களில் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்ப தயாராகும் ஊழியர்கள். ஆனால் ஒரு சிமெண்ட் கம்பெனியில் "சீப் அக்கவுண்டண்டாக" வேலைபார்க்கும் சேதுவிற்கு மட்டும் இப்பொழுது தான் நாள் தொடங்கியது போல் வேலை பளு.
முப்பத்தி ஐந்து வயது சேது. மாநிறம். ஒல்லியான தேகம். தீர்க்கமான கண்கள். எதையும் தாங்கும் இதயம் உள்ள உழைப்பாளி. நேர்மையின் சிகரம். அவரது மேஜையில் எழுதிய வாசகம் "செய்யும் தொழிலே தெய்வம்" போல் தான் அவருடைய வாழ்க்கையும்.
இன்னும் சில கோப்புகளுடன் ஆபீஸ் பாய் ஆறுமுகம் சேதுவின் அறைக்கு வருகிறான்.
"மேனேஜர் இத உங்க டேபிள்ள வைக்க சொன்னாரு சேதுநா..." என்றான்.
அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலையை செய்துகொண்டு இருக்கிறார் சேது.
"அண்னா... நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. இந்த மேனேஜர் எல்லா வேலையும் உன் மேல தான் போடுறான். நீயும் தலையாட்டிகிட்டு செய்ற. ஏன் நீ மட்டும் தான் இந்த ஆபீஸ்ல இருக்கியா?' என்கிறான் ஆறுமுகம்.
சேதுவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.
"ஏதோ பண்ணி தொல..." என்று ஆறுமுகம் நகர தொடங்கும் பொழுது சேது பேசினார்.
"ஆறுமுகம்... நா கேட்ட உதவி...."
"என்ன உதவி?" என்றான் ஆறுமுகம்.
"அதான் வட்டிக்கு காசு கேட்டேனே..." என்றார் சேது.
"அண்ணா.. நீ தெரிஞ்சு தான் பேசுறியா? ஏற்கனவே ரெண்டு லட்சத்துக்கு வட்டி குடுத்துட்டு இருக்கே. இன்னும் கேட்டா அவன் குடுக்க மாட்டான். இன்னும் கெடைச்சாலும் உன்னால சமாளிக்க முடியாது." என்றான் ஆறுமுகம்.
"ஏய் ப்ளீஸ். உன்ன நம்பித்தான் இருக்கேன். புள்ளக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்." என்றார் சேது.
"உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னா. நீ அனாவசியமா செலவு செய்ய மாட்ட. ஆனா இன்னும் எவ்வளவு தான் கடன் வாங்குவே?" என்றான் ஆறுமுகம்.
சேதுவிடம் இருந்து பதில் வரவில்லை. அவரது கண்களில் நீர் தேங்க ஆரம்பித்ததை ஆறுமுகம் பார்த்தான். அதை பார்க்க முடியாமல் உடனே அங்கிருந்து கிளம்பினான்.
சேதுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மேஜை மீது இருந்த தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பார்த்தான். அன்பான குடும்பம். சேது, அவரது மனைவி, மற்றும் மகன். எல்லா ஆண்களும் செய்த அதே தவறு. குடும்பத்திற்காக கொஞ்சம் அதிக பணம் சேமிக்க முடிந்தால்? இளம் வயதில் ரிட்டயர்டு ஆக முடிந்தால்? குடும்ப உறுப்பினர்களுக்கான தேவைகளை அவர்கள் கேட்பதற்கு முன்பே பூர்த்தி செய்துவிட்டால்? என்று ஆர்வத்தினால் சில முடிவுகள் எடுத்து கடனில் சிக்கிக்கொள்ளும் அதே கதை.
சேதுவின் அறைக்கு மேனேஜர் வருகிறார். அவரை பார்த்ததும் சேது நிற்க.
"எக்ஸ்க்யூஸ் மீ சேது. பிரீயா? உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்கிறார்.
"சொல்லுங்க சார். பிரீ தான்" என்கிறார் சேது.
"நிறைய பைல்ஸ் உங்க டேபிள்ள வைக்க சொல்லிட்டேன்னு என்ன கோச்சிக்காதீங்க சேது." என்றார் மேனேஜர்.
"அய்யயோ.. அப்படிலாம் இல்ல சார். நான் முடிச்சிடுறேன்." என்கிறார் சேது.
"ஐ நோ சேது. அந்த அன்வர் ஒரு வேலையும் சரியா செய்ய மாட்டேங்குறான். அவன் கிட்ட கத்தி கத்தி என்னோட தொண்டையே போச்சு. உங்ககிட்ட சுருக்கமா சொன்ன போதும்” என்றார் மேனேஜர்.
"அதெல்லாம் பிரச்சனை இல்லை சார்" என்றார் சேது.
"சரி சேது. நாளைக்கு காலையில என்னோட டேபிள்ள இந்த பைல்ஸ் இருக்கணும். ஒகே?" என்றார் மேனேஜர்.
மேனேஜர் செல்ல தயாராக இருக்கும் பொழுது சேது அவரை இடைமறித்து
"சார். நான் உங்ககிட்ட ஒரு மாத சம்பள அட்வான்ஸ் கேட்டேனே?" என்றார் சேது.
"ஏற்கனவே வாங்குன அட்வான்ஸ் முடிய ரெண்டு மாசம் இருக்குல்ல. அதுக்கு அப்பறம் நீங்க வாங்கிக்கோ. என்னால கம்பெனி ரூல்ஸ் தாண்டி ஒன்னும் செய்யமுடியாது சேது" என்று சொல்லிவிட்டு சேதுவின் முகத்தை கூட பார்க்காமல் மேனேஜர் வீட்டிற்கு கிளம்பினார்.
ஆபிசில் ஒவ்வொரு விளக்கும் அனைய தொடங்கியது. சேது இருக்கும் அறையில் மட்டும் விளக்கு எரிகிறது. எல்லோரும் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.
ஆறுமுகம் வீட்டிற்கு கிளம்பும் முன் "அய்யா. எல்லார்கிட்டயும் பணம் கேட்காதீங்க. இந்த ஆறுமுகம் இருக்க கவலை எதற்கு?" என்று சொல்லி வாழ்த்துவது போல் கையை காட்டினான்.
ஒரு மணி நேரம் சென்றது.
சேதுவின் அறையில் உள்ள டாய்லெட் ‘பிளஷ்’ செய்யும் சத்தம் கேட்கிறது. வேலை பளுவிற்கு நடுவில் இருக்கும் சேது அந்த சத்தத்தை கேட்டு "இவன் இன்னுமா இங்க இருக்கான்" என்பது போல் தலையை வேண்டா வெறுப்பாக அசைகிறார்.
டாய்லெட் கதவை திறந்து ஒரு நடுத்தர வயதுள்ள மனிதன் வருகிறார். நாற்பது வயது, மாநிறம், அழகான, கட்டுமஸ்தான உருவம், நவ நாகரீக உடை என்று பார்பதற்க்கே பெரிய இடத்து பிள்ளை போல் இருக்கிறார்.
ஆனால் சேது எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்துகொண்டு இருக்கிறார்.
"என்னப்பா? நான் வந்தது கூட தெரியாம வேல பாக்குற" என்றார் வந்தவர்.
பதில் ஏதும் சொல்லாமல் சேது வேலை பார்க்கிறார்.
"சரிப்பா. என் மேல உள்ள கோவம் உனக்கு போலன்னு தெரியுது. அதுக்காக இப்படியா பதில் சொல்லாம இருக்கறது? என்றார் வந்தவர்.
"ஏன் இங்க வந்த?" என்கிறார் சேது.
"என்னப்பா இப்படி கேட்டுட்டே? உன்ன பின் தொடராது தானே என்னோட வேலை." என்றார் வந்தவர்.
"நான் எங்க போனாலும் ஏன் வர. நானா உன்ன கூப்பிட்டேன். நேத்திக்கு நானும் என் மனைவியும் கடைத்தெருவுக்கு போனோம். அங்கேயும் ஒளிஞ்சிருந்து என்ன பாத்த. போன வாரம் எங்க வீட்டு விஷேஷத்திலேயும் உன்ன பாத்தேன். அவ்வளவு ஏன் தினமும் நான் பஸ்ல ஆபீஸ் வரும்போதும் பின்னாடி நின்னு என்ன பாக்குறது எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா? இந்த வேலைய இப்பவே நிறுத்துக்கோ. என்ன நிம்மதியா இருக்க விடு" என்றார் சேது.
"எதுக்கு கோவப்படுறேன்னு எனக்கு தெரியாதா? நீ பிசினஸ் பண்ணும்போது என்ன தான் முதல் பார்ட்னரா போட்ட. ஆனா பல முக்கியமான நேரத்துல என்னால உனக்கு உதவ முடியல. அதானே இந்த கோவத்துக்கு காரணம்? என்றார் வந்தவர்.
சேது அமைதியாக இருந்தார்.
"இப்போ கூட உனக்கு பணம் தேவை. எல்லார்கிட்டயும் கேக்குற. ஆனா என்கிட்டே மட்டும் கேக்க மாட்டேங்குற. அவ்வளவு தானே நமக்குள்ள? " என்றார் வந்தவர்.
"இங்க பாரு மிஸ்டர்...." என்று சொல்லி சேது நிறுத்திவிட.
"அழகன்" என்று பதில் வந்தது.
"இது தான் என் பிரச்சனையே! ஒவ்வொரு முறை என்ன பாக்கும்போது ஒரு பேர் சொல்ற" என்றார் சேது.
அழகனிடம் இருந்து புன்னகை தான் பதிலாக கிடைத்தது.
" இங்க பாரு மிஸ்டர் அழகன். உனக்கும் எனக்குமான பந்தம் எப்பயோ முடிஞ்சி போச்சு. நா நாடு ரோட்ல நிக்கும் பொது, கடன்காரன் கிட்ட திட்டு வாங்கும்போது, நாலு பெரு நாலு விதமா பேசும்போது நீ அமைதியா பாத்திட்டு இருந்தது எனக்கு தெரியும். உன்ன போய் பிஸ்னஸ் பார்ட்னரா போட்டேன் பாரு..." என்றார் சேது.
"நான் கேட்கலேயே பா? நீயா என் பேர போட்ட. நீ பிசினஸ் பண்ண, நீ தோத்து போன. ஆனா பழி மட்டும் என் பேர்ல..." என்றார் அழகன்.
"ஓ ஹோ... சரி பா. நீ போகலாம்" என்றார் சேது.
"நான் என்ன சொல்ல வரேன்னா..." என்று அழகன் முடிப்பதற்குள் சேது அவரை நோக்கி பெரிய கும்பிடு போடுகிறார். அழகனும் சென்றுவிடுகிறார்.
மறு நாள்....
சேது பேரூந்தில் வந்துகொண்டு இருக்கிறார். தன்னுடைய சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று சிந்தனை.
அவரது அருகில் உள்ள இருக்கையில் அழகன் வந்து அமர்கிறார்.
அழகனை பார்த்து எரிச்சல் அடைந்தார் சேது.
"நீ சொல்றதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் சொல்லிடுறேன் பா. நீ உன்னோட பிசினஸ்ல தப்பு பண்ணும்போதுலாம் உனக்கு உன் நண்பன் மூலமா, மனைவி மூலமா, இன்னும் சிலர் மூலமா சொன்னேனே. ஆனா நீ எல்லாத்துக்கும் நானே நேர்ல வந்து சொல்லணும்னு நெனச்சே. என்னோட நிலமைல இருந்து யோசி. உன்ன போல பல பேரு இருக்காங்க. எல்லார்கிட்டயும் நானே நேர்ல போய் சொல்லணும்னு நெனச்சா எப்படி? நா இருக்கேன்னு நீ தப்பான முடிவு எடுத்துட்டு பழி மட்டும் என் மேல போடுற." என்றார் அழகன்.
சேதுவிடம் இருந்து மௌனம்.
"பெருசா என்னால உதவி பண்ணமுடியலையே தவிர உன்னோட சில நண்பர்கள் மூலமா சின்ன சின்ன உதவி பண்ணிட்டு தானே இருக்கேன். அதுக்கு பின்னாடி நான் இல்லேனு நீ பிடிவாதமா நெனெச்சாலும் பரவாயில்லை. என்னோட பந்தம் உனக்கு தேவை இல்லாம போகலாம். ஆனா என்ன நம்புன உன்ன என்னைக்கும் நா கைவிட மாட்டேன்." என்றார் அழகன்/
சேதுவின் கண்களில் இருந்து கண்ணீர். அழகனின் கால்களில் விழுந்து விடலாமா என்று யோசித்தார்.
'கண்மூடித்தனமா உன்ன எல்லா பிரச்சனலேந்து நா காப்பாத்தணும்னு நீ நெனக்குற. "நீ தப்பே பண்ணல, வலிய அனுபவிக்கலான்னா, பணத்தை இழக்கலன்னா எப்படி அத சம்பாதிக்கும்போது கட்டி காப்பாத்துவ? தோல்விய கையாள முடியலைன்னா வெற்றிய எப்படி கையாளப்போற? ஒரு முறை நீ தோத்துட்டா மறுமுறை நீ கவனமா இருப்ப." என்றார் அழகன்.
"அய்யா... போதும். போதும். என்னோட தப்ப நா உணர்ந்திட்டேன்." என்றார் சேது.
"சரி. ஆறுமுகம் ஆபீசுல பணத்தோட இருக்கான். அப்பறம் உனக்கு வரவேண்டிய பழைய தொகை எல்லாம் இன்னும் ரெண்டு நாள்ல வந்திடும். கூடிய சீக்கிரம் நீ பிரச்சனைல இருந்து வெளிய வரப்போற. இனிமே நீ பொழச்சிப்ப. உன்ன நா பாக்குறது இதுதான் கடைசி தடவை." என்றார் அழகன்.
"கடைசி தடவை" என்கிற வார்த்தை கேட்டதும் சேதுவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அழகனின் காலில் விழுந்தார். கண்ணீரால் அழகனின் பாதத்தில் அபிஷேகம் செய்தார் சேது. அழகன் சேதுவின் தலையை தடவிக்கொடுக்க யாரோ சேதுவிடம் பேசியது போல் இருந்தது. இருக்கைக்கு நடுவில் இருக்கும் அந்த இடைவெளிக்குள் உட்கார்ந்து இருந்த சேது தலையை தூக்கி பார்த்தார்.
வயதான நபர் ஒருவர் "அய்யா நா உட்காரலாமா கால் வாலிக்குது." என்று சேதுவின் இருக்கைக்கு அருகில் கையை காட்டினார்.
சேது தனது இருக்கைக்கு அருகில் உட்கார்ந்திருந்த அழகனை பார்க்க. அழகன் புன்னகைத்துக்கொண்டே எழுந்து செல்ல தொடங்கினார்.
"சீட்டு காலியா இருந்துச்சுனு வந்தேன். வந்து பாத்தா நீங்க கீழ உட்காந்திருக்கீங்க. யாருக்காவது இடத்த புடிச்சு வச்சிருக்கீங்களா?" என்றார் வயதானவர்.
இல்லை என்பதை போல் தலை அசைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் சேது. அழகன் சேதுவை பார்த்து புன்னகைத்துக்கொண்டு சற்று தூரத்தில் நின்றார். கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் மேலே பார்க்க அழகன் அங்கே இல்லை. அழகன் நின்ற இடத்தின் பின் பகுதியில் "செய்யும் தொழிலே தெய்வம்" என்று எழுதப்பட்டு இருக்கிறது.
ஜன்னல் ஓர கம்பிகளின் மேல் தலையை சாய்த்துக்கொண்டு, தென்றல் கற்று வருட, கண்களை மூடினார் சேது. அவரது கண்களுக்குள் காட்சி தெரிந்தது. அதில் முதன் முதலில் அழகனை பார்த்த அந்த நாளுக்குள் மூழ்கினார் சேது.