நூறாவது கல்யாணம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை.

கல்யாண மண்டபம் களேபரமாக இருக்கிறது. இன்னும் ஒரு மணிநேரத்தில் முஹூர்த்தம் சம்பந்தமான விஷயங்கள் தொடங்குவதால் மக்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக இருக்கிறார்கள். இளங்கோ எல்லோரையும் கடுமையாக வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார்.

“யாருயா அங்கே? வாசல்ல கோலம் போட்டாச்சா? விளக்கு ஏத்தியாச்சா? அய்யர் எங்கே? தாலி எங்கே? நீங்க மாப்பிள்ளை வீட பொண்ணு வீடா?” என்று எல்லோரையும் பரபரப்பிற்குள் ஆக்குவது இவர் தான்.

“கல்யாண மண்டபத்தின் வாசலை ஒரு வீடியோ கேமரா படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. இளங்கோ அந்த கேமராமேனிடம் "இங்க பாரு பக்காவா ஒன்னு விடாம சூட் பண்ணிடனும்” என்றார் இளங்கோ.

அதைக்கேட்ட கேமராமேன் செந்தில் ஆம் என்று சொல்வது போல் தலை அசைத்தார்.

எவ்வளவு கேமரா வந்திருக்கு? என்று கேட்டார் இளங்கோ.

நீங்க சொன்னது போல ஒரு டிரோன், மூணு கேமரா வந்திருக்கு என்றார் செந்தில்.

“உன்ன நம்பி தான்யா இருக்கேன். எல்லாமே கேண்டிடா எடுக்கணும். கேமரா எங்க வச்சிருக்கோம்னு தெரியாத மாதுரி படம் பிடிக்கணும்” என்றார் இளங்கோ.

நீங்க ஒன்னும் கவலை படாதீங்க தல. எல்லாம் நா பாத்துக்கறேன். கண்ண மட்டும் காட்டுங்க. மத்த விஷயங்களை போய் பாருங்க. இந்த வேலைய என்கிட்ட விட்டுடீங்கல்ல, கவலைய விடுங்க என்றார் செந்தில்.

“மாப்பிள்ளை ரெடியா? பொண்ணு ரெடியா?” என்று கத்திக்கொண்டே மண்டபத்திற்குள் நுழைந்தார் இளங்கோ.

எதிரில் சுகுணா வர. அவரை பார்த்து "என்னம்மா உங்க பொண்ணு தயாரா? பொண்ணுங்க மேக்கப் போடுறதா இருந்தா அஞ்சு அமினேரம் கூட பத்தாது போலயே? சீக்கிரம் ரெடி ஆக சொல்லுங்க என்று சுகுணாவை பேசவிடாமல் அந்த இடத்தில் இருந்து சென்றார் இளங்கோ.

சுகுணா மணமகள் அறைக்குள் நுழைகிறாள். எல்லோரையும் விட மாதவி டென்ஷனாக இருந்தாள். ஒரு பெரிய கண்ணாடி முன்பாக மணமகள் கோலத்தில் இருக்கிறாள். கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கலந்த கவலை.

“என்னம்மா தயாரா?” என்றாள் சுகுணா.

தயார் என்பது போல் தலை அசைத்த மாதவி, சுகுனாவை பார்த்து "அம்மா இன்னைக்கு எனக்கு எத்தனையாவது கல்யாணம் தெரியுமா? நூறாவது முறையா என் கழுத்துல தாலி ஏறப்போவுது." என்று சொன்னாள்.

“நல்லா கணக்கு போட்டு பாத்தியா? இது தானே நூறாவது?” என்றாள் சுகுணா.

“நான் எப்படி மறப்பேன். எந்தப்பொண்ணுக்கும் கிடைக்காத பாக்கியம். தொன்னுத்தி ஒம்போது தடவ தாலி கட்டியும் கன்னியாக இருக்கும் பெண் அப்படிங்கற சாதனை எனக்கு தானே அம்மா?” என்றாள் மாதவி.

“என்னடி இப்படிலாம் பேசுற. எனக்கு ஒரு மாதிரியா, குற்ற உணர்ச்சியா இருக்கு. உன்னோட இந்த நிலைமைக்கு நான் தானே காரணம். அப்பா இல்லாம வருமானம் போச்சு. கடன் வேற. அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அப்போ தான் புரோக்கர் மஹாலிங்கம் வந்தான்” என்றாள் சுகுணா.

“அம்மா அது புரோக்கர் இல்ல...ஏ..” என்று இழுத்தாள் மாதவி.

“ஏதோ ஒன்னு. அவன் கிட்ட எனக்கு ஒரு வேலை குடுக்க சொல்லி கேட்டேன். ஆனா உன்ன பாத்துட்டு நீ தான் சரியா இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சான். எனக்கும் வேற வழி தெரியாம உன்ன இதுக்குள்ள இழுத்து விட்டுட்டேன். என்ன மன்னிச்சிரும்மா” என்று கண் கலங்கினாள் சுகுணா.

“என்னம்மா நீ? நீயும் என்ன பண்ணுவே. கடன் ஒரு பக்கம், கடன் காரன்களோட கண்ணு உன் மேலன்னு எவ்வளவோ உன் மானத்த காப்பாத்திக்க முயற்சி செஞ்சே. உன் மேல எனக்கு எந்த வித கோவமும் இல்ல. இதெல்லாம் விதிப்படி தான் நடக்குது. சிவசாமி ஜோசியர் என்ன சொன்னாருன்னு ஞாபகம் இருக்குல்ல? என்றாள் மாதவி.

“உன் ஜாதகத்துல பயங்கர தோஷம் இருக்கு. நூறாவது தாலி தான் நிலைக்கும்னு சொன்னாரு” என்றாள் சுகுணா.

“சொன்னாருல்ல. இன்னைக்கு தான் அந்த நாள். மனோ தான் என்னோட புருஷன்” என்றாள் மாதவி.

“அப்படி டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துடாதே மாதவி. நம்மள மாதிரியான வேலை செய்ற பொண்ணுங்கள பத்தினின்னு யாரும் நினைக்க மாட்டாங்க. இவ்ளோ நாள் நீ அவன பாக்குற, அவன்கிட்ட பேசுற. ஆனா அவன்  ஒன்ன திரும்பி பார்த்தனா? மத்த தொன்னுத்தி ஒம்போது பெரு போல இவனும் உன் கழுத்துல தாலிய கட்டிட்டு திரும்பி பார்க்காம போயிடுவான். இன்னைலேந்து உன் தோஷம்லாம் போய்டுச்சுன்னு நினச்சிக்கோ. இனிமே இந்த வேலைலாம் செய்யவேணாம். இப்போ தான் நாம வசதியா இருக்கோம்ல. அம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன்” என்றாள் சுகுணா.

மாதவி மௌனமாக இருந்தாள்.

“சரி. அவன் தான் வேணும்னா இப்போ நடக்கவேண்டிய விஷயங்கலாம் முடியட்டும். மனோ அம்மா கிட்ட நான் பேசுறேன். அவங்க கால்ல விழுந்தாவது உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறேன்” என்றாள் சுகுணா.

“அதெல்லாம் வேணாம்மா. எனக்காக நீ யார் கால்லயும் விழவேணாம். எது நடக்குமோ அது நடக்கும். என்னோட ஆசை இப்படி. அவனுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு அவனுக்கும் கனவு இருக்கும்ல. அது தெரியாம நாம போர்ஸ் பண்ணக்கூடாது. காலம் முழுக்க மனசுக்கு பிடிக்காதவளோட அவனால வாழ முடியாது” என்றாள் மாதவி.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இளங்கோ தலையை மட்டும் உள்ளே விட்டு "சுகுணாம்மா. ரெடியா" என்றார்.

"நாங்க ரெடி" என்றபடி இருவரும் அறையில் இருந்து வெளியே வந்தனர்.

"இங்க பாருமா மாதவி. மேடைல உங்க அப்பா அம்மா ஏறுனதும் உன்ன கூப்பிடுவாங்க. அதுக்கப்புறம் மனோ வருவான். அதுக்கப்புறம் நான் உனக்கு சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல. ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லிவிட்டு சுகுணாவை பார்த்து இளங்கோ "சுகுணாம்மா போய் அப்படி பின்னாடி உட்காருங்க" என்று மக்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தை காட்டினார் இளங்கோ.

செந்தில் தனது சிஷ்யர்களுக்கு ஹெட்போனில் கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டு இருந்தார். டிரோன் பறந்து கொண்டு எல்லோரையும் படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. மூன்று கேமராவும் ஒளிவிளக்கின் நடுவில் இயங்கிக்கொண்டு இருந்தது.

செந்திலின் அருகில் வந்த இளங்கோ "செந்திலு. இன்னைக்கு ஏதோ ஒன்னு நடக்கப்போவுதுன்னு என்னோட மனசு சொல்லுது. இந்த மாதவி பொண்ண பாத்தியா? ஏதோ வித்யாசமா இருக்கால்ல?" என்றார்.

"எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே" என்றார் செந்தில்.

"அதானே! நீ ஏன் இன்னும் முன்னேறலைன்னு இப்போ தெரியுது. இதுக்கெல்லாம் ஞான கண்ணு வேணும்யா" என்றார் இளங்கோ.

இளங்கோ திரும்பி மேடையில் இருக்கும் அய்யருக்கு கண்ணை காட்டினார்.

உடனே அய்யர் "பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிண்டு வாங்கோ" என்று கத்தினார். கல்யாண மேடை பரபரப்பாக ஆனாது. மேடையில் இருந்து "மாதவி வாமா" என்று குரல் கேட்டது. "மனோ எங்கே" என்று இன்னொரு குரல் கேட்டது.

மாதவிக்கு திடீர் என்று உடல் முழுவதும் சொல்லமுடியாது ஒரு பயம் கலந்த உணர்ச்சிகள் பரவியது. மேடை ஏறும்பொழுது கூட்டத்தில் அமர்ந்துள்ள சுகுணாவை பார்த்துக்கொண்டே ஏறினாள். சுகுணாவும் "எல்லாம் நன்றாக நடக்கும்" என்று கண்ணால் செய்கை செய்தாள்.

அய்யர் மந்திரங்கள் ஓத. மாதவி மேடையில் அமர்ந்தாள். அவளின் கண்கள் மனோவை தேடியது. மணமகன் அரை கதவு திறந்தது. பட்டு வேட்டி பட்டு சட்டையில் மனோ மிளிர்ந்தான். அவளின் கண்ணில் அவன் தேவலோக இந்திரனாக காட்சி அளித்தான்.

மனோ மாதவியை பார்க்கவே இல்லை. மேடையில் வந்து எல்லோருக்கும் வணக்கம் வைத்தான். பிறகு மாதவியின் அருகில் உட்கார்ந்தான். மாதவி மனதில் உணர்ச்சிகளின் அலை பாய்ந்தது. அவனை அப்படியே கட்டி பிடித்து விடலாமா? என்று யோசித்தாள். நூற்றுக்கணக்கான கண்கள் அவளை பார்ப்பது போல் உணர்ந்தாள். இன்னும் சொல்லப்போனால் லட்சக்கணக்கான கண்கள்.

அய்யர் "கெட்டி மேளம்.... கெட்டி மேளம்" என்று கத்தினார். மங்கள வாத்தியம் இசைக்க "மாங்கல்யம் தந்துனானேனா....." என்று மந்திரம் கேட்டதுமே மனோ தாலியை கையில் எடுத்தான். அவன் கண்களில் ஒத்திக்கொண்டு, மக்கள் எல்லோரிடமும் காட்டினான். இளங்கோ செந்திலை பார்த்து கண் அசைத்தார். செந்தில் தன சிஷ்யர்களிடம் ஹெட்போனில் கட்டளைகள் கொடுத்தார்.

மாதவியின் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. சுகுணா கூட்டத்தில் இருந்து மாதவியை பார்த்துக்கொண்டே ஆனந்த கண்ணீர் வடித்தாள். கையில் தாலியை எடுத்த மனோ திரும்பி மாதாவின் கழுத்தில் படிக்கும்பொழுது அவளின் கண்ணை பார்த்தான். அவன் கைகள் மூன்று முடிச்சு போட்டது.

இளங்கோ கண் அசைக்க மேடையில் இருந்தவர்கள் உதிரி பூக்களை மணமக்களின் மேல் தூவினார்கள். யாரோ சிலர் பலூன்களை உடைத்தார்கள். மேடையில் ஆரவாரம். மாதவி அவளின் கழுத்தில் ஏறிய அந்த நூறாவது தாலியையை பார்த்தாள். அதை கையில் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

சில நிமிடங்களில் ஆரவாரம் ஓய்ந்தது. இளங்கோ கண் அசைக்க மேடையில் இருந்த அய்யர், மாப்பிள்ளை வீட்டார்கள்  மற்றும் பெண் வீட்டார்கள் மேடையில் இருந்து கீழே இறங்கினர். இப்பொழுது மேடையில் மனோ மற்றும் மாதவி மட்டும் இருந்தனர். இருவரும் அவர்களின் இடத்தை விட்டு நகரவில்லை. கல்யாண மண்டபமே மௌனமாக இருந்தது. செந்தில் இளங்கோவை பார்க்க, இளங்கோ அமைதியாக நடப்பதை கவனி என்று செய்கை காட்டினார்.

சிறிது நேரத்திற்கு பிறகு மாதவி மணமேடையில் இருந்து எழுந்தாள். மனோ அவளை தொடர்ந்து எழுந்து நின்றான். மாதவி அவளின் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி கீழே வைத்தாள். தன் அம்மாவை ஒரு முறை பார்த்தாள் பிறகு மனோவை பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் தாலியை கழற்ற நினைத்தாள்.

தாலியில் கை வைத்ததும் மாதாவின் கையை இருக்க பற்றினான் மனோ. அதை எடுக்காதே என்பது போல் அவனது கண்கள் மாதவியை பார்த்தது. இவ்வளவு நாட்கள் அதிகம் பேசாத மனோ பேசினான் "மாதவி. இத கழற்றாதே! இது போலி தாலி இல்ல. நம்ம கல்யாணம் பொய் இல்ல" என்றான்.

மாதவிக்கு அவள் காண்பது கனவா இல்ல நினைவா என்று புரியவில்லை. "நீ என்ன நினைக்குறேன்னு எனக்கு தெரியும். நல்ல குடும்பத்துல கல்யாணம் செஞ்சுகிட்டு. உன்னமாதிரி எப்பவும் ஜாலியா இருக்கற பையனைத்தானே நீ தேடுனே! ஆனா நான் உன்ன மாதுரி இல்ல. ரொம்ப கூச்ச சுபாவம். அம்மா பையன். உனக்கு நான் பொருத்தமானவன் இல்ல" என்றான் மனோ. மாதவியின் கண்ணில் ஆனந்த கண்ணீர். சிவசாமி ஜோசியர் சொன்னது சரியாப்போச்சு என்று மனதிற்குள் நினைத்தாள்.

"என்ன வேணாம்னு சொல்லிடாதே மாதவி. எங்க அம்மாகிட்ட எப்படியாவது நான் பேசறேன். அவங்க கைல கால்ல விழுந்தாவது அவங்க சம்மதத்தை நான் வாங்குறேன். இன்னைக்கு ஏதாவது பிரச்சனை பண்ணிடக்கூடாதுன்னு நான் தான் அவங்கள வரவேணாம்னு சொல்லிட்டேன்" என்றான் மனோ. ஆச்சரியத்தில் உறைந்தாள் மாதவி. "நீ இவ்வளவு தெரியமா பேசுவியா?" என்பது போல் மனோவை பார்த்தாள் மாதவி.

"நீ மட்டும் நோ சொல்லிடாதே மாதவி. இப்பவே நாம வீட்டுக்கு போறோம். நான் எங்க அம்மாவ கன்வின்ஸ் பண்றேன். ப்ளீஸ்..." என்றான் மனோ. மாதவி அவனை கட்டி பிடித்தாள். முத்தம் கொடுத்தாள். மனோவும் இவ்வளவு நாட்கள் அவனின் மனதில் அடக்கி வைத்த பாசத்தை, ஆசையை அவளை அப்படியே தூக்கி சுற்றினான். அவளின் மேல் மலர்களை தூவினான். அவளை கட்டி பிடித்து உச்சி முகர்ந்தான்.

மாதவிக்கும், சுகுணாவுக்கும் பெரிய நிம்மதி கிடைத்தது.

இளங்கோ செந்திலை பார்த்து "நான் சொன்னேன்ல ஏதோ நடக்கப்போவுதுன்னு" என்றார்.

தல நீங்க பெரிய ஆளு. உங்க கிட்ட தான் நாங்கல்லாம் பாடம் கத்துக்கணும். டைரக்டர் இளங்கோண்ணா சும்மாவா? என்றார் செந்தில்.

சிரித்துக்கொண்டே இருந்த இளங்கோவிடம் செந்தில் "தல. கட் சொல்லுங்க. இல்லேனா மனோ இங்கேயே பஸ்ட் நைட் கொண்டாடிடுவான் போல" என்றார்.

"இந்த டி.வி தொடர் மூலமா எங்க கல்யாணத்த இந்த தமிழ் நாடே பார்க்கணும்னு தான் நான் விரும்புறேன். என்ன வாழவைத்த மக்களுக்கு என் வணக்கம்" என்று சொல்கிறார்கள் கல்யாண தம்பதிகள்.

"கட். சூப்பர்" என்று டைரக்டர் இளங்கோ கத்த. எல்லோரும் கை தட்ட தொடங்கினர்.

"மனோ. போய் உங்க அம்மாகிட்ட சம்மதம் வாங்கு. நாங்களும் உங்களுக்கு சப்போட் பண்றோம்" என்று யூனிட்டில் உள்ள அனைவரும் அவனுக்கு தெம்பு கொடுத்தார்கள்.

எல்லோரும் கலைந்தார்கள். மாதவி தன் கழுத்தில் ஏறிய நூறாவது தாலியையே பார்த்துக்கொண்டு இருக்க. மனோ மாதவியின் கையை பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு மண்டபத்தில் இருந்து கிளம்பினான்.